பாகலூர் அருகே விவசாய நிலத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு-மூதாட்டி மயங்கியதால் பரபரப்பு


பாகலூர் அருகே விவசாய நிலத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு-மூதாட்டி மயங்கியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

பாகலூர் அருகே விவசாய நிலத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது திடீரென மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய நிலம்

ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள சேவகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ், மஞ்சுநாத். அண்ணன், தம்பிகளான இவர்கள் 2 பேரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்வாரியம் சார்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான இழப்பீட்டை அவர்களுக்கு வழங்குவதாக மின்வாரியம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த அவர்கள், கோர்ட்டில் வழங்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி

இந்தநிலையில் சுரேஷ், மஞ்சுநாத் விவசாய நிலத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நேற்று கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் சேகர் தலைமையில் அதிகாரிகள் அங்கு வந்தனர். இதற்கு சுரேஷ் மற்றும் மஞ்சுநாத் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் டிரான்ஸ்பார்மர் அமைக்க கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அவர்களின் தாய் லட்சுமியம்மா (65) திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் ஆகியோர் சேவகானபள்ளிக்கு சென்று சுரேஷ், மஞ்சுநாத் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு 8 மணி வரை நீடித்தது.

இதையடுத்து புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு தருவதாக சுரேஷ், மஞ்சுநாத் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story