பி.நாட்டாமங்கலத்தில் பள்ளிக்குள் 'டிரான்ஸ்பார்மர்'; பீதியில் மாணவ, மாணவிகள் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இடமாற்றம் செய்யப்படுமா?
பி.நாட்டாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆபத்தான வகையில் உள்ள டிரான்ஸ்பார்மரால் மாணவ, மாணவிகள் பீதியில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பனமரத்துப்பட்டி,
அரசு உயர்நிலைப்பள்ளி
பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி பி.நாட்டாமங்கலம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்திலேயே உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மாரியம்மன் கோவில் தெரு, விநாயகர் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும் மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்மர்
பள்ளி வளாகத்தில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி இந்த பகுதியை சேர்ந்த பெற்றோர்களும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் செய்யப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளிக்குள் டிரான்ஸ்பார்மர் உள்ளதால் மாணவ, மாணவிகள் பீதியில் உள்ளனர்.
அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு இந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறும் மின்வாரிய அதிகாரிகள் இந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்ற உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.
பலமுறை கோரிக்கை
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சித்துராஜ் என்பவர் கூறியதாவது:-
பள்ளி வளாகத்திலேயே டிரான்ஸ்பர்மர் உள்ளதால் அந்த பகுதியில் விளையாட செல்லும் மாணவர்கள் டிரான்ஸ்பார்மரை தொட்டு விடும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் டிரான்ஸ்பார்மரை சுற்றியுள்ள கம்பி வேலிகளில் ஒரு சில நேரங்களில் 'ஷாக்' அடிக்கிறது. அது போன்ற தருணங்களில் மாணவர்கள் அந்த கம்பி வேலியை தொட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும்.
எனவே இந்த டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்யக்கோரி உரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் செய்யப்படவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடனடியாக டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவ, மாணவிகள் பாதிப்பு
இதுகுறித்து எஸ்.நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறியதாவது:-
பள்ளி வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து அடிக்கடி மின் பொறிகள் தெறித்து வெளியே விழுகிறது. இதனால் மாணவர்கள் அந்த பகுதியில் எந்த நேரமும் அச்சத்துடனே செல்கின்றனர். சில நேரங்களில் டிரான்ஸ்பார்மர் மீது காகம் உள்ளிட்ட பறவை இனங்கள் அமர்வதன் மூலம் டிரான்ஸ்பார்மர் வெடித்து அதில் இருந்து தீப்பொறிகள் தெறித்து விடுகிறது.
இதனால் அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்குள் டிரான்ஸ்பார்மர் உள்ளது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
இந்த டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்வதற்காக அதே பகுதியில் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அதற்கான திட்ட மதிப்பீடுகளும் தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்காக கோப்புகள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைக்க பெற்றவுடன் பள்ளி வளாகத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் உடனடியாக இடமாற்றம் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.