உருமாறி மிரட்டும் கொரோனா 'ஒமைக்ரான் பி.எப்.7'மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?பொது சுகாதார இயக்குனர்- பொதுமக்கள் கருத்து


உருமாறி மிரட்டும் கொரோனா  ஒமைக்ரான் பி.எப்.7மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?பொது சுகாதார இயக்குனர்- பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

உருமாறி மிரட்டும் கொரோனா ஒமைக்ரான் பி.எப்.7 பரவி வருவதால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா என்பது குறித்து பொது சுகாதார இயக்குனர் மற்றும் பொதுமக்கள் கூறிய கருத்துகளை பார்க்கலாம்.

தேனி

கொரோனா நோய்க் கிருமி அழிவே இல்லை என்பது போல் உருமாறிப் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் ஓலமிட்டது

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நோய்த் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அழையா விருந்தாளியாக அனைத்து நாடுகளிலும் ஊடுருவி சமூகப் பரவலாக மாறியது. உலகமே ஓலமிட்டு அழும் வகையில் அந்தக் கொடிய நோய் தொற்றுக்கு சுமார் 45 லட்சம் பேர் உயிர் இழந்தனர்.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் அதன் பீதி அனைவரையும் தொற்றி இருந்தது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டன.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட உடன் கொரோனா தொற்று பரவலின் வேகத்துக்கும், வீரியத்துக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. அதனால் நோய் பற்றிய அச்சம் மக்கள் மனதில் மெல்ல, மெல்ல விலகியது. நாளடைவில் கொரோனா வைரசை சாதாரண காய்ச்சல் போன்று மக்கள் கருதத் தொடங்கினர். எனவே முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.

புது வடிவம்

கொரோனா கிருமி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என புதுப் புது வடிவில் உருமாறி அச்சுறுத்தினாலும் மக்கள் கவலை கொள்வதாக இல்லை.இந்த நிலையில் கொரோனா கிருமியை உலகிற்கு அறிமுகம் செய்த சீனாவில் 'ஒமைக்ரான் பி.எப்.7' என்ற வடிவில் கொரோனா புதிய உருவம் எடுத்துள்ளது. இந்த நோய்க் கிருமி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத், ஓடிசா ஆகிய மாநிலங்களில் ஊடுருவிவிட்டது.

வீரியமான கொரோனா தொற்று போன்று இந்தக் கிருமியும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகச் சுகாதார அமைப்பும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

அவசர ஆலோசனை

இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டிலும் இந்த நோய்க் கிருமி நுழைந்து விடாது தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது பற்றிய மருத்துவ நிபுணர், பொதுமக்களின் பார்வை வருமாறு:-

மருத்துவ இயக்குனர்

தமிழக அரசின் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம்:-

கொரோனா தொற்று பற்றி அச்சம் கொள்ளாமல் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒமைக்ரான் பி.எப்.5 கிருமி பரவியது. அதனை நாம் எளிதில் கடந்து வந்துவிட்டோம்.

தற்போது ஒமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவுகிறது. இந்த வைரஸ் கிருமி பரவல் வேகம்தான் அதிகம் இருக்கிறது. பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. இதனால் புதிய வகை கொரோனா பரவலை பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை.

அதே நேரத்தில் இன்னும் கொரோனா கிருமி முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு செல்வதை முதியோர்கள் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதேப் போன்று சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பண்டிகை காலங்கள் வருவதால் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது நல்லது. முகக் கவசம் கொரோனா பரவலில் இருந்து மட்டுமல்ல காற்றில் பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

ஊரடங்கு வேண்டாம்

மகேஸ்வரன் (ஓட்டல் உரிமையாளர், பழனிசெட்டிபட்டி) :- கொரோனா பரவல் காரணமாக ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்போது தான் தொழில் மீண்டு வருகிறது. மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் என்பது அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமல், முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஊரடங்கு, கடைகள் திறக்க நேரம் நிர்ணயம் போன்ற கட்டுப்பாடுகள் விதித்தால் மீண்டும் தொழில் பாதிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி, தேவைப்பட்டால் சில நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கலாம். கொரோனா அதிகம் பரவும் நாடுகளுக்கு தற்காலிகமாக விமான சேவையை நிறுத்தி வைக்கலாம்.

கணேசன் (பழ வியாபாரி, கம்பம்) :- பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே, கடுமையாக கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது. முகக் கவசம் அணிவதை சில மாத காலத்துக்கு கட்டாயமாக்கலாம். இருமாநில எல்லைப் பகுதிகளில் கொரோனா பரிசோதனை செய்யலாம். மக்கள் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். ஏழை, எளிய மக்கள், சாலையோர வியாபாரிகள், வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

வாழ பழகிவிட்டோம்

லட்சுமி (தனியார் நிறுவன ஊழியர், உப்புக்கோட்டை) :- கொரோனா முதல் இரு அலைகள் தான் அதிக பயத்தை கொடுத்தது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் அடைந்த பிறகு, அதன் மீதான பயம் குறைந்து விட்டது. மக்கள் கொரோனாவோடு வாழ பழகிவிட்டோம்.

இனி எத்தனை முறை உருமாறி வந்தாலும், மக்கள் முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவற்றை கடைபிடிக்கும் போது பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். அரசு கடுமையான கட்டுப்பாடுகள் எதையும் விதித்து விடக்கூடாது. அவ்வாறு விதித்தால் அது கொரோனா ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும், மக்களின் வாழ்க்கையில், பொருளாதாரத்தில் பாதிப்பை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பயப்பட தேவையில்லை

டாக்டர் பிரபாகரன் (தேனி) :- உருமாறிய கொரோனா மீண்டும் பரவுகிறது என்பதால் மக்கள் பயப்பட தேவையில்லை. தடுப்பூசி செலுத்தியதால் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். வீடுகளில் சுய வைத்தியம் பார்க்கக்கூடாது. வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்பும் போது கைகளை சோப்பால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

சர்க்கரை நோய் போன்ற இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்றவர்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டாம். மக்கள் சமூக இடைவெளியின்றி அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம். அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story