திருநங்கைகளுக்கான அழகி போட்டி: மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு


திருநங்கைகளுக்கான அழகி போட்டி: மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு
x

திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கான மிஸ் கூவாகம் அழகி போட்டியை நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின.

அங்கு காலையில் அழகி போட்டியின் முதல் சுற்று மற்றும் 2-ம் சுற்று தேர்வு போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற 46 திருநங்கைகளில் 16 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

கலைநிகழ்ச்சிகள்

நேற்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மிஸ் கூவாகம் அழகி போட்டியின் இறுதிச்சுற்று போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலாவதாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள்.

அழகி போட்டி

இந்நிகழ்ச்சி முடிந்ததும் அழகி போட்டியின் இறுதிச்சுற்று தொடங்கியது. 2-வது சுற்று அழகி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேரில் ஒருவர் மட்டும் கலந்துகொள்ளவில்லை. மற்ற 15 பேரும் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்த மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் சேலம் சாதனா, தூத்துக்குடி ரித்திகா, நவீனா, சென்னை ஷாம்ஸ்ரீ, நிரஞ்சனா, டிஷா, பெங்களூரு சுபாஷினி ஆகிய 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மிஸ் கூவாகம் தேர்வு

இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 7 பேருக்கும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த நிரஞ்சனா மிஸ் கூவாகம்-2023-க்கான அழகியாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த டிஷா 2-ம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாதனா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

இவர்களுக்கு புகழேந்தி எம்.எல்.ஏ., கிரீடம் சூட்டி பாராட்டினார். சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திருநங்கைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு

பின்னர், மிஸ் கூவாகமாக தேர்வான சென்னையை சேர்ந்த நிரஞ்சனா கூறுகையில், தற்போது திருநங்கைகள், எல்லாத்துறைகளிலும் சாதிக்க தொடங்கி விட்டனர். எங்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அரசு உரிய இடஒதுக்கீடு வழங்கினால் அனைவருமே வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்வோம் என்றார்.


Next Story