தாம்பரம் அருகே திருநங்கை வெட்டிக்கொலை


தாம்பரம் அருகே திருநங்கை வெட்டிக்கொலை
x

தாம்பரம் அருகே திருநங்கை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த புதூர், மப்பேடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா (வயது 28). திருநங்கை. அதே பகுதியில் இவருடைய சித்தப்பா தீனதயாளன் (50) வசித்து வந்தார். இவரும் திருநங்கை ஆவார். தீனதயாளன் தெருக்கூத்தும் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சஞ்சனா, தனது சித்தப்பா தீனதயாளனை செல்போனில் தொடர்பு கொண்டு கூடுவாஞ்சேரி, நந்திவரத்தில் தெரு கூத்துக்கு செல்ல வேண்டும் என அழைத்தார். ஆனால் தீனதயாளன், தனக்கு வேறு வேலை இருப்பதாக கூறி வரமறுத்துவிட்டார்.

வெட்டிக்கொலை

நேற்று காலை சஞ்சனா மீண்டும் தீனதயாளனை தொடர்பு கொண்டார். அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தீனதாளனின் அண்ணன் முத்துப்பாண்டி என்பவர், சஞ்சனாவை செல்போனில் தொடர்பு கொண்டு தீனதயாளன் வீட்டுக்கு வரவில்லை என கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த சஞ்சனா, தீனதயாளனை பல்வேறு இடங்களில் தேடினார்.

இந்தநிலையில் தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரி பகுதியில் மாம்பாக்கம் பிரதான சாலையில் திருநங்கை தீனதயாளனின் இருசக்கர வாகனம் நிற்பதை கண்டார். அங்கு சென்று பார்த்தபோது, காலி மனையின் உள்ளே இருந்த கால்வாய் தண்ணீரில் தீனதயாளன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், தலை, கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்த தீனதயாளன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலையாளிகள் பிடிபட்டால்தான் திருநங்கை தீனதயாளன் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story