திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை
திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மூன்றாம் பாலினத்தவர் மறுவாழ்விற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வங்கிக்கடன் உதவி, சுய வேலைவாய்ப்பு, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, புதிய குடும்ப அட்டை வழங்குதல், மூன்றாம் பாலினத்திற்கான நலவாரிய அட்டைகள் உள்ளிட்டவை தொடர்பாக 153 மனுக்கள் பெறப்பட்டன. மருத்துவ காப்பீடு திட்ட அட்டை கேட்டு விண்ணப்பித்த 27 திருநங்கைகளுக்கு கலெக்டர் ஆகாஷ் அதனை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், தனித்துணை கலெக்டர் ஷீலா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.