விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில்திருநங்கைகள் தொல்லையால் கதறும் பயணிகள்காவல்துறை கண்டுகொள்ளுமா?
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருநங்கைகள் தொல்லையால் பயணிகள் கதறி வருகிறார்கள்.
தென்தமிழகத்தை இணைக்கும் மிக முக்கியமான நகரமாக விழுப்புரம் நகரம் விளங்கி வருகிறது. இதனாலேயே விழுப்புரம் நகரத்திற்கு விழிமா நகரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் உள்ள பஸ் நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பஸ் நிலையமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் திகழ்ந்து வருகிறது.
விழுப்புரம் பஸ் நிலையம்
இங்கிருந்து சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களுக்கும் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் திருவிழா கூட்டம்போல் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு முன்பு திருநங்கைகள் அட்டகாசம் அதிகளவில் இருந்தது. காவல்துறை எடுத்த நடவடிக்கைகளால் சில வருடங்களாக திருநங்கைகளின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டது.
திருநங்கைகள் அட்டகாசம்
இந்நிலையில் சமீபகாலமாக மீண்டும் பஸ் நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளது. நம் காதுகள் பிழக்க உரக்க கைத்தட்டி கொண்டு ஆரவாரம் செய்தபடி வரும் ஒரு சில திருநங்கைகள், பஸ்சிற்குள் ஏறிச்சென்று பயணிகளிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலையத்தில் பஸ்சிற்காக காத்து நிற்கும் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வது, பணம் கொடுக்க மறுக்கும் பயணிகளை ஆபாச வார்த்தையால் திட்டுவது, மிரட்டியும் பணம் பறித்தல், செல்போன் பறித்தல் உள்ளிட்ட பலவித குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில திருநங்கைகள், சினிமா நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சிகரமான உடைகளை அணிந்துகொண்டு வந்து அநாகரீமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் பயணிகளை அழைப்பதில் சில சமயங்களில் திருநங்கைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் கட்டிப்புரண்டு சண்டை போடுகின்றனர். அப்போது வாய்கூசும்படியான, மிகவும் அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்றனர். இவர்களின் இத்தகைய செயல்களால் பயணிகள் முகம்சுழிக்கின்றனர். பஸ் நிலையத்தில் நிற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களையும் இவர்கள் விட்டுவிடுவதில்லை. திருநங்கைகள் செய்யும் அட்டகாசத்தால் பெண்களும், குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
வியாபாரிகளிடம் தகராறு
ஏற்கனவே விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தின் பல இடங்களில் மின்விளக்குகள் பழுதடைந்து இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருநங்கைகள் மட்டுமின்றி வழிப்பறி கொள்ளை கும்பலும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி கும்பலின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பயணிகளோடு பயணிகளாக கலந்து அவர்களது உடைமைகளை சுருட்டிக்கொண்டு மாயமாகி விடுகிறார்கள். பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தொந்தரவு செய்வது மட்டுமல்லாமல் அங்குள்ள ஒவ்வொரு கடை, கடையாக சென்று பணம் கேட்டு மிரட்டுவதும், பணம் கொடுக்க மறுக்கும் வியாபாரிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டு தகராறில் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக பஸ் நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம், அடாவடி செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி பஸ் நிலையத்தில் இருக்கும் புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமலும், கண்டும், காணாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரங்கேறும் வழிப்பறி
மேலும் திருநங்கைகள் விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்ளும் நபர்கள், அவர்களை பின்தொடர்ந்து செல்லும்போது ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் வைத்து அந்த நபர்களை திருநங்கைகள் மிரட்டுவதோடு சில சமயங்களில் அடித்து உதைத்தும் பணம், செல்போன், நகைகளை பறித்துச்செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வந்தாலும் பணம், நகைகளை பறிகொடுப்பவர்கள், நடந்த சம்பவத்தை பற்றி வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டு போலீசில் புகார் செய்யாமல் சென்று விடுகிறார்கள்.
திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்று அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு அவர்களுக்கென்று தனியாக நலவாரியம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு நீட்டி வரும் உதவிக்கரத்தால் இன்றைக்கு திருநங்கைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கண்டு பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில திருநங்கைகள் செய்யும் குற்றச்செயல்களினால் ஒட்டுமொத்த திருநங்கைகளின் சமுதாயத்திற்கும் அவப்பெயரும், களங்கமும் ஏற்படுகிறது.
விழிப்புணர்வு நடவடிக்கை தேவை
எனவே திருநங்கைகள் தங்கள் சமுதாயத்திற்குரிய நன்மதிப்பு கெடாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும். அதையும் மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது காவல்துறை வேடிக்கை பார்க்காமல் தனது கடமையை செய்ய வேண்டும். அதேநேரத்தில் திருநங்கைகள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் மாதந்தோறும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் திருநங்கைகளை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
மேலும் பஸ் நிலையத்தில் பயணிகளின் நலன் கருதியும், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையிலும், திருநங்கைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த போலீசார், அவ்வப்போது ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டும் என்பதே பயணிகள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.