இலவச வீடு கேட்டு ஒப்பாரி வைத்து திருநங்கைகள் முற்றுகை போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு கேட்டு திருநங்கைகள் ஒப்பாரி வைத்து முற்றுகை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச வீட்டு கேட்டு திருநங்கைகள் ஒப்பாரி வைத்து முற்றுகை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருநங்கைகள்
திருவண்ணாமலை, செங்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், கலசபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தனித்தனியாகவும், கூட்டாகவும் இணைந்து வசித்து வருகின்றனர்.
பெரும்பாலான பகுதிகளில் திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் தமிழ்நாடு அரசின் இலவச வீடு கேட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர். சுமார் 200 முறைக்கு மேல் மனு அளித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பெரிய வீட்டு தலைவி ராதிகா நாயக், சின்ன வீட்டு தலைவி ஜீவா நாயக் ஆகியோர் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை மறியல்
அதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு போளூர் சாலையில் கைகளை கோர்த்தவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அலுவலக நுழைவு வாயில் முன்பு கோஷங்கள் எழுப்பிய படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ''திருவண்ணாமலை மாவட்டத்தில் 350-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் திருநங்கைகளுக்கு இலவச வீடு மாவட்ட நிர்வாகங்கள் கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து இலவச வீட்டிற்காக தாங்கள் போராடி வருகிறோம். இலவச வீடு கேட்டு பல்வேறு முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளவில்லை'' என்று கூறினர்.
பின்னர் அவர்கள் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் இலவச வீடு கேட்டு மனு அளித்தனர்.