முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
முன்மாதிரி விருது
சமூகத்தில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி, தனது சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி திருநங்கையர் தினம் நடைபெறுகிறது. அன்றைய தினம் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதும், ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகளான திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கையருக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.
28-ந் தேதி
இதற்கு வருகிற 28-ந் தேதிக்குள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான கையேடு தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த கையேட்டில் கலெக்டர், சமூக நல அலுவலரின் பரிந்துரை கடிதம், சுயசரிதை, சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைப்படங்கள், பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவைக்கான விரிவான அறிக்கை, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று உள்ளிட்ட 14 வகையான விவரங்களை கொண்டு கையேடு தயாரித்து தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்களை அனுப்ப வேண்டும். இவற்றை பாளையங்கோட்டை திருவனந்தபுரம் ரோடு வ.உ.சி. மைதானம் எதிரில் சுப்பிரமணியபுரம் தெருவில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.