தூத்துக்குடியில் ஆள்மாற்றி சிகிச்சை: வக்கீலுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடியில் ஆள்மாற்றி சிகிச்சை அளித்த விவகாரத்தில் வக்கீலுக்கு இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மில்லர்புரம் பாரதிநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கண் ஆஸ்பத்திரியில் கண் பரிசோதனை செய்தாராம். அப்போது, அவருடைய பெயரில் மற்றொரு நோயாளியும் அங்கு சிகிச்சைக்கு வந்து இருந்தாராம். இந்த நிலையில் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 2 பேரின் பரிசோதனை விவரங்களையும் மாற்றி சிகிச்சை அளித்து உள்ளனர். மேலும் மற்றொரு நோயாளிக்கு எடுக்க வேண்டிய ஸ்கேன் பரிசோதனையை சரவணனுக்கு எடுத்து, அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். இதனை அறிந்த சரவணன் அங்கிருந்து வெளியேறி சென்று விட்டார். இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஸ்கேன் செய்ததற்கான பணத்தை வலுக்கட்டாயாக பெற்று சென்றார்களாம்.
இதில் மனம் உளைச்சலுக்கு ஆளான சரவணன் தூத்துக்குடி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் திருநீலபிரசாத் மற்றும் செயலாளர் கனகசபாபதி ஆகியோர், கவனக்குறைவாகவும், சேவை குறைபாடுடனும் நடந்து கொண்ட கண் ஆஸ்பத்திரி நிர்வாகம், சரவணனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும், ஸ்கேனுக்காக பெறப்பட்ட தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.