அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு


அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிக்கக் கூடாது. அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள புராதன, பாரம்பரிய சின்னங்கள், சிலைகள் மற்றும் கோவில்களின் பாதுகாப்பு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பிறப்பித்தது. அதில், தமிழ்நாடு அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் 75 கட்டளைகளை பிறப்பித்து இருந்தது.

இந்த 75 கட்டளைகளில், 6 கட்டளைகளை அமல்படுத்துவதில் சிரமம் உள்ளது. எனவே, அதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.

6 கட்டளைகள்

அதில், "17 உறுப்பினர்களை கொண்ட மாநில பாரம்பரிய ஆணையம் அமைக்க வேண்டும், கோவில்களின் வரவு- செலவு கணக்கை மத்திய தணிக்கை குழு உதவியுடன் தணிக்கை செய்ய வேண்டும், கோவில் சொத்துகளை பராமரித்தல் மற்றும் உரிமை மாற்றுதல் தொடர்பாக பொதுமக்கள் கருத்துகளை பெறுதல், கோவில் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம், அறங்காவலர்களுக்கு நிரந்தர ஊதியம், அறங்காவலர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு மற்றும் அரசியல் பின்புலம் இல்லாமல் இருத்தல் ஆகிய 6 கட்டளைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மறுஆய்வு மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சிரமம் இல்லை

17 உறுப்பினர்களை கொண்ட மாநில பாரம்பரிய ஆணையம் அமைத்து, கோவில்கள், நினைவுச்சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களை அரசு பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவை மறுஆய்வு செய்ய முடியாது. அந்த உத்தரவை உறுதி செய்கிறோம். ஏற்கனவே, அரசு நியமித்துள்ள குழுவை பாரம்பரிய ஆணையமாக அங்கீகரிக்க வழிவகை இல்லை.

கோவில் வருமானத்தை தணிக்கை செய்ய, மத்திய தணிக்கை குழுவின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை பெறவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தோம். இந்த உத்தரவை அமல்படுத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு சிரமம் இருக்க வாய்ப்பு இல்லை.

சட்டப்படி ஊதியம்

கோவில்களின் சொத்துகளை பராமரித்தல், நீண்டகால குத்தகைக்கு விடுதல், கோவிலின் நலன் கருதி சொத்துகளை விற்பனை மற்றும் பெயர் மாற்றம் செய்யும்போது, அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34-ல் கூறியுள்ள நெறிமுறைகளை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அறநிலையத்துறை ஆணையர் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளோம்.

மேலும், கோவில் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் சட்டத்தின் அடிப்படையில், ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும். அறங்காவலர்கள் பணி என்பது அரசு பணியாக எடுத்துக் கொண்டு, சட்டத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவுகளையும் உறுதி செய்கிறோம்.

ஆன்மிக சிந்தனை

அரசியல்வாதிகளையும், அரசியல் பின்புலம் உடையவர்களையும் அறங்காவலர்களாக நியமிக்கக்கூடாது. ஒருவேளை நியமித்தால், சம்பந்தப்பட்ட நபர் ஆன்மிக சிந்தனை மற்றும் இறை நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும். எந்த கோவிலின் அறங்காவலராக நியமிக்கப்படுகின்றனரோ, அந்த கோவில் சார்ந்த ஆன்மிக விஷயங்களில் நாட்டமும், நம்பிக்கையும் உள்ளவராக இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத பட்சத்தில் அதுபோன்ற நபர்களை அறங்காவலராக நியமிக்கக்கூடாது. அத்துடன் அறங்காவலர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்.

இந்த மறுஆய்வு மனுவை முடித்து வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.


Next Story