போக்குவரத்து கமிஷனரின் இணையதளம் தமிழில் மொழிபெயர்ப்பு: அமைச்சர் தொடங்கிவைத்தார்
போக்குவரத்து-சாலை பாதுகாப்பு கமிஷனரின் இணையதளம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
சென்னை,
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளுக்கான இணையதளங்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனரின் இணையதளம் முறைப்படியாக தமிழில் தயாரிக்கப்பட்டு நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்தத் தமிழ் இணையதளத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து-சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம், தேசிய தகவல் மையத்தின் மாநிலத் தகவல் இயல் அதிகாரி ஆண்டனி, தேசிய தகவல் மையத்தின் முதுநிலை இயக்குனர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இன்று முதல் புதிய சேவைகள்
மாநிலம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் 48 சேவைகளை முழுக்கவும் கணினிமயப்படுத்தி ஆன்லைன் மூலமே பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக ஏற்கனவே ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு, முகவரி மாற்றம் உள்பட 6 சேவைகள் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
மீதமுள்ள 42 சேவைகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஓட்டுனர் உரிம நகல் பெறுதல், பெயர்-முகவரி மாற்றம், பெர்மிட் மாற்றம், சிறப்பு உரிமம் கோரல் என 25 சேவைகள் ஆன்லைனில் கொண்டு வரப்படவுள்ளன. மீதமுள்ள கீழ்க்கண்ட 17 சேவைகளையும் ஆன்லைனில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய தகவல் மையம் எடுத்து வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட இருக்கிறது.
சனிக்கிழமைகளில்...
இந்த ஆன்லைன் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு முதலில் தங்களது ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அப்டேட் ஆக இருப்பதை உறுதி செய்த பின்னரே உள்ளீடு செய்ய முடியும். விவரங்கள் மாறுபட்டிருந்தால் இந்த ஆன்லைன் சேவையை பெற முடியாது. எல்.எல்.ஆர். மற்றும் ஓட்டுனர் உரிமம் பெறுவதில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருவதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை எந்தெந்த அலுவலகங்களில் அதிகமாக உள்ளதோ அல்லது பெறப்படுகின்றதோ அந்த அலுவலகங்களை சனிக்கிழமைகளிலும் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் எந்தெந்த அலுவலகங்கள் சனிக்கிழமையில் செயல்படும் என்பது போன்ற அனைத்து விவரங்களை உள்ளடக்கிய விரிவான பத்திரிகைச் செய்தியும் வெளியிடப்படும். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.