அய்யம்பேட்டை-கணபதி அக்ரஹாரம் இடையே போக்குவரத்து துண்டிப்பு
புதிய பாலம் கட்டும் பணியின் போது சாலை சரிந்து விழுந்ததால் அய்யம்பேட்டை-கணபதி அக்ரஹாரம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அய்யம்பேட்டை;
புதிய பாலம் கட்டும் பணியின் போது சாலை சரிந்து விழுந்ததால் அய்யம்பேட்டை-கணபதி அக்ரஹாரம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழமையான பாலம்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை -கணபதி அக்ரஹாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே சுமார் 80 ஆண்டுகள் பழமையான பாலம் உள்ளது. இந்த பாலத்தை மாகாளிபுரம், கணபதி அக்ரஹாரம், வீரமாங்குடி, ஈச்சங்குடி, மணலூர், பட்டுக்குடி, இலுப்பக் கோரை, உள்ளிக்கடை, பெருமாள் கோவில் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த பாலத்தின் வழியே தஞ்சையில் இருந்து இளங்கார்குடி, இலுப்பக் கோரை ஆகிய கிராமங்களுக்கு 2 அரசு பஸ்களும், 3 மினி பஸ்களும் சென்று வந்தன. திருவையாறு - கும்பகோணம் சாலை பகுதியில் உள்ள ஊர்களுக்கு செல்லும் அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்களும், இந்த சாலை வழியே தான் சென்று வந்தன.
பழுதடைந்தது
மேலும், தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினந்தோறும் இந்த பாலத்தின் வழியே சென்று தான் மாணவ-மாணவிகளை பள்ளி, கல்லூரிக்கு அழைத்து சென்று வருகின்றனர். வட பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் இந்த பாலத்தின் வழியே தங்கள் விளை பொருட்களை நகரங்களுக்கு கொண்டு சென்று வருகின்றனர்.பழமையான இந்த பாலம் பழுதடைந்ததால் அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. பழைய பாலமும், புதிய பாலமும் இணையும் வடபுறத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக நேற்று முன் தினம் முதல் கன ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது.
சாலை சரிந்து விழுந்தது
இரண்டு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை பழைய பாலத்தின் வடபுற சாலை திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அய்யம்பேட்டை -கணபதி அக்ரஹாரம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு முற்றிலும் முடங்கி போனது.இந்த சாலையை பயன்படுத்தும் கிராம மக்கள் அவசர தேவைகளுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் கூட அய்யம்பேட்டைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் வரும் வடக்கு பகுதி கிராம மக்கள் சுமார் 30 கி.மீ. சுற்றி பாபநாசம் அல்லது திருவையாறு சென்று தான் அய்யம்பேட்டைக்கு வர வேண்டியுள்ளது. எனவே குடமுருட்டி ஆற்றுக்குள் தற்காலிக சாலை அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
----