6 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்; நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை


6 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும்; நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 6 சக்கரங்களுக்கு மேற்பட்ட வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கனிம வளங்களுக்கு தடை

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

அப்போது நாம் தமிழர் கட்சியின் நாகர்கோவில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ்குமார், குமரி மத்திய மாவட்ட செயலாளர் சீலன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் சாலை செப்பனிடுதல் பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதனை ஆணையர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதநல்லூர் பேரூராட்சி சரல்விளை பகுதியில் உள்ள வேளிமலை மலைத்தொடரில் பூனை வகையைச் சேர்ந்த மலைச்சிங்கம் எனப்படும் காட்டு விலங்கு அடிக்கடி வந்து மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை வேட்டையாடி கடித்து கொன்றுவிடுகிறது. கடந்த 6 மாதங்களில் 17 ஆடுகள் காட்டு விலங்கால் அடித்து கொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து அந்த காட்டு விலங்கை அப்புறப்படுத்த வேண்டும். 6 சக்கரத்துக்கு மேலான சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் மூலம் கனிமவளங்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி மத்திய மாவட்ட செயலாளர் மேசியா தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோட்டூர்கோணம் பகுதியில் உள்ள பிலாங்காலை குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்த வேண்டும். மேலும் குளத்தில் பக்கச்சுவரை கட்டி பொதுமக்கள் குளிப்பதற்கு ஏதுவாக அங்கு படித்துறை அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருப்பது.

குமரி மாவட்ட பெண்கள் சுயதொழில் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், குமரி மாவட்டத்தில் 3 சென்ட், 5 சென்ட் இடங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். எனவே அவர்கள் பத்திரப்பதிவு செய்ய உதவ வேண்டும். 2016-க்கு பிறகு வாங்கிய நிலங்களை பிரிப்பதற்கோ, விற்பதற்கோ, வீடு கட்டுவதற்கோ தடை விதித்துள்ளார்கள்.

ஏழை, எளிய மக்கள் வாங்கிய இடங்களுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் மறு பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசும், அதிகாரிகளும் பத்திரப்பதிவை சீரமைத்து ஏழை, எளிய மக்களையும், தொழிலையும் பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

காலமுறை ஊதியம்

தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் 10 வருடங்களுக்கு மேலாக பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சீருடை வழங்க வேண்டும், பழுதடைந்த பம்பு அறைகளை பழுது பார்க்க அனைத்து ஊராட்சிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story