சாதாரண உடையில் பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்கள்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று போக்குவரத்து ஊழியர்கள் சாதாரண உடையில் பணியில் ஈடுபட்டனர்.
சாதாரண உடையில் டிரைவர்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழிற்நுட்ப ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீருடை வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் திண்டுக்கல், மதுரை, விருநகர் மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையாக சீருடை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே சீருடை வழங்க வலியுறுத்தி நேற்று சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் சீருடை அணியாமல், சாதாரண உடையில் பணி செய்யும் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழிற்நுட்ப ஊழியர்கள் ஆகியோர் போக்குவரத்து கழக சீருடையை அணியாமல் சாதாரண உடைகளில் பணியில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் அச்சிட்ட அட்டையை அணிந்து இருந்தனர்.
5 ஆண்டுகளாக தரவில்லை
இதுகுறித்து சி.ஐ.டி.யூ. அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல பொதுச்செயலாளர் ராமநாதன் கூறுகையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக சீருடை வழங்கவில்லை. அதன்படி இதுவரை 21 செட் சீருடைகள் வழங்க வேண்டியது இருக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே வழங்கிய சீருடைகள் பழையதாகி கிழிந்து விட்டன.
இதனால் பலர் சொந்த பணத்தில் சீருடை வாங்கி தைத்து போட்டுள்ளனர். அதற்கு தையல் கூலி கூட தரவில்லை. எனவே சீருடை வழங்க வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் சாதாரண உடை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளித்தால் போராட்டத்தை பரிசீலனை செய்வோம். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.