போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சி.ஐ.டி.யு.பொதுச்செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி.பொதுச் செயலாளர் உலகநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். டி.டி.எஸ்.எப். பொதுச் செயலாளர் சந்தானம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுகள் என்பதை 4 ஆண்டுகள் என மாற்றியதை கைவிட வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையுடன் வழங்க வேண்டும். பிற துறை ஊழியர்கள் போல் ஓய்வுபெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும். தொழிலாளியிடம் பிடித்தம் செய்த ரூ. 12 ஆயிரம் கோடியை திருப்பித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பெருமாள், காமராஜ், குமரகுருபரன், ஏ.ஐ.டி.யு.சி.மாநில செயலாளர் காசிவிஸ்வநாதன், பொருளாளர் சுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.