கே.என்.பாளையம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற 13 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்


கே.என்.பாளையம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற  13 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கே.என்.பாளையம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கே.என்.பாளையம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் ராமர் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒருவர் சந்தேகப்படும் வகையில் சாக்கு மூட்டையுடன் வந்து கொண்டிருந்தார்.

உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனையிட்டனர். சோதனையின்போது சாக்கு மூட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 13 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

கைது

இதைத்தொடர்ந்து மொபட்டில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 32) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து உள்ளூர் பகுதியில் மளிகை கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும்,' தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து செல்வத்தை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

அந்தியூர், நம்பியூர்

அந்தியூர் அருகே பட்லூர் நால் ரோட்டில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வெள்ளித்திருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள மளிகை கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர். இதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரான அந்த பகுதியை சேர்ந்த ஜான்சன் (44) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 135 பாக்கெட் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நம்பியூர் பிலியம்பாளையம் பகுதியில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அந்த கடையின் உரிமையாளரான ஈஸ்வரமூர்த்தி (50) என்பவரை நம்பியூர் போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 8 பாக்கெட் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story