வீதிகளில் குப்பைகளை அள்ளிய நகராட்சி தலைவர்


வீதிகளில் குப்பைகளை அள்ளிய நகராட்சி தலைவர்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிடங்கை பூட்டியதால் ஆணையாளருடன் மோதல் முற்றுவதால் நகராட்சி தலைவர் வீதிகளில் குப்பைகளை அள்ளினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பரிதா நவாப் இருந்து வருகிறார். நகராட்சியின் ஆணையாளராக சுந்தராம்பாள் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் குப்பைகளை நகராட்சி தலைவர் பரிதா நவாப் நேற்று துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து அகற்றினார். பின்னர் அவர் கூறுகையில், நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சேரும் குப்பைகளை மகராஜகடை செல்லும் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தோம். கடந்த 3 நாட்களாக அந்த குப்பை கிடங்கை நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் மூடி வைத்துள்ளார்.

இதனால் நகரில் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி உள்ளது. அது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்ட போது குப்பைகளை தரம் பிரித்து பிறகே கிடங்கிற்கு கொண்டு வர வேண்டும் என கூறுகிறார். வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்குகிறார்கள். தெருக்களில் சேரும் குப்பைகளை பிரிக்க நேரம் ஆகிறது என பணியாளர்கள் கூறுகிறார்கள்.

பொதுமக்கள் எங்களை தான் கேள்வி கேட்கிறார்கள். எனவே நகராட்சி ஆணையாளர் குப்பை கிடங்கை திறந்து குப்பைகளை அள்ளி சென்று கொட்டவும், நகராட்சியை தூய்மையாக வைத்துகொள்ளவும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கூறினார்.


Next Story