டிராவல்ஸ் நிறுவன அதிபருக்கு சரமாரி கத்திக்குத்து; 2 வாலிபர்கள் கைது
பெரியகுளம் அருகே கார் வாடகை பணம் கேட்ட டிராவல்ஸ் நிறுவன அதிபரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம் அருகே கார் வாடகை பணம் கேட்ட டிராவல்ஸ் நிறுவன அதிபரை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேனிக்கு சவாரி
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 53). இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சேகரிடம், சிங்காநல்லூரை சேர்ந்த கமலக்கண்ணன் (26), பீளமேடு பகுதியை சேர்ந்த நிஷார் அகமல் (18) ஆகியோர் தேனிக்கு காரில் சவாரி செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சேகர் தனது காரில் ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் வந்ததும், காருக்கு டீசல் போட வேண்டும் என கமலக்கண்ணன் மற்றும் நிஷார் அகமலிடம் சேகர் பணம் கேட்டார். அப்போது அவர்கள் இன்னும் 10 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் பணம் தருவதாக கூறியுள்ளனர்.
கத்திக்குத்து
இதையடுத்து சேகரும் அவர்களை அழைத்துக்கொண்டு பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சென்றார். அப்போது காரை நிறுத்துமாறு அவர்கள் கூறினர். இதனால் சேகர் காரை நிறுத்திவிட்டு வாடகை பணம் தருமாறு கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த 2 பேரும், எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கூறியபடி சேகரை சரமாரியாக தாக்கினர். மேலும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினர். இதில் ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே சேகர் மயங்கி விழுந்தார்.
2 பேர் கைது
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சேகரை கத்தியால் குத்திய 2 பேரையும் பிடித்து, ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது படுகாயத்துடன் மயங்கி கிடந்த சேகரை, போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து சேகர் அளித்த புகாரின்பேரில் கமலக்கண்ணன் மற்றும் நிஷார் அகமலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.