இருதய குறைபாடுகள் உள்ள 11 குழந்தைகளுக்கு 3 மணி நேரத்தில் நவீன சிகிச்சை


இருதய குறைபாடுகள் உள்ள 11 குழந்தைகளுக்கு 3 மணி நேரத்தில் நவீன சிகிச்சை
x

நெல்லையில் இருதய குறைபாடுகள் உள்ள 11 குழந்தைகளுக்கு 3 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருதயவியல் துறை பேராசிரியர் டாக்டர் ரவிசந்திரன் எட்வின் கூறியதாவது;-

இருதய குறைபாடு

நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

இதில் மானூர், கடையநல்லூர், தூத்துக்குடி, நாகர்கோவில், சங்கரன்கோவில், வி.எம்.சத்திரம், சாத்தூர் பகுதிகளை சேர்ந்த, இதயத்தில் ஓட்டை இருந்த 9 குழந்தைகள், தமணி பிரச்சினை உள்ள 2 குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் சிகிச்சை பெற தேர்வு செய்யப்பட்டனர்.

நவீன சிகிச்சை

இந்த 11 குழந்தைகளுக்கும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் பல்நோக்கு மருத்துவமனையில் இருதய சிகிச்சைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள மையங்களில் கடந்த 13-ந்தேதி அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 3 மணி நேரம் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை எனது (டாக்டர் ரவிசந்திரன் எட்வின்) தலைமையில் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி இருதயவியல் டாக்டர் முத்துகுமரன், 3 பேராசிரியர்கள், 6 உதவி பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்டனர். மயக்கவியல் துறை டாக்டர்கள் அமுதா ராணி, செல்வராஜ், சசிகலா, ஜெயக்குமார் ஆகியோர் உதவியாக இருந்தனர்.

முதல்முறையாக...

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெரியவர்களுக்கு இதுபோன்ற நவீன முறையில் இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது முதல்முறையாக குழந்தைகளுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் தொடர்ந்து ஒரு வாரம் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். பின்னர் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர். அவர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை மாத்திரை வழங்கப்படும். இதே போன்று 3 மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பிரத்யேக சிகிச்சை மையங்கள் மூலம் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 8 ஆயிரம் நோயாளிகளுக்கு இருதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.


Next Story