உப்பாறு ஓடையை ஆக்கிரமிக்கும் சீமைகருவேல மரங்கள்


உப்பாறு ஓடையை ஆக்கிரமிக்கும் சீமைகருவேல மரங்கள்
x
திருப்பூர்


உப்பாறு ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உப்பாறு ஓடை

தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக இருப்பதில் கிணறு, குளம், குட்டை, ஏரி, ஓடை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாலும், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் பாழாகி வருகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் உப்பாறு ஓடை வழியாக செல்கிறது. இதனால் குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடியில் ஈடுபடுகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் இறுதியாக உப்பாறு அணைக்கு செல்கிறது

அகற்ற நடவடிக்கை

உப்பாறு அணை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. உப்பாறு ஓடை செல்லும் வழிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. சில இடங்களில் ஓடை தெரியாத அளவிற்கு சீமைகருவேல மரங்களாக காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் ஓடை வழியாக செல்லும் மழை நீர் வீணாகிறது.

சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ள நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட உப்பாறு ஓடை பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.எனவே உப்பாறு ஓடை யை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை மழைக்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story