நெடுஞ்சாலையோரம் புளியமரக்கன்றுகள் நடும் விழா
நெடுஞ்சாலையோரம் புளியமரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நீடாமங்கலம்:-
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நீடாமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் கிராம ஊராட்சியின் வருவாய் பெருக்கத்திற்கு ஏதுவாக புளிய மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் நீடாமங்கலம் சித்தமல்லி-பன்னிமங்கலம் பகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை மன்னார்குடி கோட்ட பொறியாளர் கந்தசாமி புளியமரக்கன்றினை நட்டார். விழாவில் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சங்கீதா, உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சித்தமல்லி ஊராட்சி செயலாளர் கருப்பையா, சாலை பணியாளர்கள் குமரகுரு, கணேஷ், ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சித்தமல்லி- பன்னிமங்கலம் நெடுஞ்சாலையில் 20 அடிக்கு ஒரு புளிய மரக்கன்று வீதம் சாலையின் இருபுறங்களிலும் நடப்பட்டது. முன்னதாக நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் வரவேற்றார். மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.