பலத்த காற்றுக்கு வேரோடு சாய்ந்த மரம்
கொடைக்கானல் அருகே பலத்த காற்றுக்கு வேரோடு மரம் சாய்ந்தது. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. பலத்த காற்று காரணமாக அவ்வப்போது மரக்கிளைகள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று அதிகாலை முதலே கொடைக்கானல் மேல்மலை பகுதியில் அவ்வப்போது லேசான சாரல் மழையும், பலத்த காற்றும் வீசியது. பலத்தகாற்றுக்கு தாக்குப்பிடிக்காமல், பூம்பாறை வன அலுவலகத்தின் அருகே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எந்திரத்தின் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகே போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. தென்மேற்கு பருவக்காற்று தொடங்கிய நிலையில், அவ்வப்போது பலத்த காற்று வீசுகிறது. இதனால் கொடைக்கானல் நகர் முதல் மேல் மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.