விளைநிலங்களில் 22 ஆயிரம் மரம் வளர்க்க இலக்கு


விளைநிலங்களில்  22 ஆயிரம் மரம் வளர்க்க இலக்கு
x
திருப்பூர்


உடுமலை வட்டாரத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விளைநிலங்களில் 22 ஆயிரம் மரங்கள் வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள்

உலகத்தின் ஒட்டு மொத்த உயிர்களுக்கும் ஒரு நண்பன் உண்டென்றால் அது மரம் தவிர வேறில்லை. மரம் வளர்ப்பை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அரசு, தனியார் மற்றும் தன்னார்வலர்களால் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. ஆனால் மரக்கன்றுகளை நடுவதில் காட்டப்படும் ஆர்வம் அவற்றை பராமரிப்பதில் காட்டப்படுவதில்லை.

இதனால் பெரும்பாலான மரக்கன்றுகளின் ஆயுள், மரங்களாக மாறுவதற்கு முன்பே முடிந்து விடுகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பதன் மூலம் வழக்கமான நன்மைகள் மட்டுமல்லாமல் கூடுதலாக பல்வேறு நன்மைகளைப் பெற முடிகிறது.

பறவைத் தாங்கி

வேலிப் பயிராக மரங்களை வளர்க்கும்போது அவற்றின் வேர்கள் மண்ணில் நீர்ப்பிடிப்பை அதிகரிப்பதால் விளைநிலங்களில் ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது. மேலும் மரங்கள் பறவைத் தாங்கிகளாக செயல்படுவதால் பயிர்களுக்குத் தீங்கு செய்யும் பூச்சிகளை பறவைகள் வேட்டையாட உதவுகிறது. அத்துடன் விளைநிலங்களுக்குள் வேகமாக நுழையும் காற்றைக் கட்டுப்படுத்தி பயிர் சேதத்தைத் தடுக்கிறது.

மரங்களிலிருந்து விழும் இலைகள் மற்றும் குச்சிகள் மக்கி விளைநிலத்துக்கு உரமாகிறது. இதுதவிர குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த மரங்களிலிருந்து வருமானமும் ஈட்ட முடிகிறது. எனவே உடுமலை வட்டாரத்தில் விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பசுமைப் போர்வை

இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

உடுமலை வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் பசுமைப் போர்வை இயக்கம் மூலம் விவசாய நிலங்களில் 22 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு தேக்கு, மகாகனி, மலைவேம்பு, செஞ்சந்தனம், ரோஸ்வுட், வெண்தேக்கு, குமிழம், புளி, புங்கன், இலந்தை, நாவல், நெல்லி, கொடுக்காப்புளி, வில்வம், பூவரசு, ஈட்டி, தான்றிக்காய், விளாமரம் ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இதனை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேலிப் பயிராகவோ, வரப்புப்பயிராகவோ, தனிப் பயிராகவோ பயிரிட்டு வளர்க்கலாம்.

இந்த திட்டத்தில் இணைந்து மரக்கன்றுகள் பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். நடப்பு ஆண்டில் உடுமலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சிகளுக்கு இந்த திட்டத்தில் 80 சதவீத முன்னுரிமை வழங்கப்படும். எனவே நமது பாரம்பரிய முறையில் விளை நிலங்களில் மரம் வளர்த்து விவசாயிகள் பயனடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story