ஓடம்போக்கி ஆற்றுப்பாலத்தின் உறுதி தன்மைக்கு ஊறு விளைவிக்கும் மரங்கள்
திருவாரூரில் ஓடம்போக்கி ஆற்றுப்பாலத்தின் உறுதி தன்மைக்கு ஊறு விளைவிக்கும் மரங்கள் வளர்ந்துள்ளன. இதை அகற்றி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
திருவாரூரில் ஓடம்போக்கி ஆற்றுப்பாலத்தின் உறுதி தன்மைக்கு ஊறு விளைவிக்கும் மரங்கள் வளர்ந்துள்ளன. இதை அகற்றி பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஓடம்போக்கி ஆற்றுப்பாலம்
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓடம்போக்கி ஆற்று பாலத்தின் வழியாக நகர பகுதிக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. பாலம் வழியாக மயிலாடுதுறை, நன்னிலம், காரைக்கால் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பாலத்தின் உறுதி தன்மைக்கு ஊறு விளைவிக்கம் வகையில் பாலத்தின் அடியில் மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் பாலம் விலுவிழக்க வாய்ப்புகள் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த பாலத்தின் தூண்களில் லேசான விரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் தடுப்பு சுவர் முற்றிலும் சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது. திருவாரூர் நகரின் முக்கிய இணைப்பு பகுதியான இந்த பாலத்தில் முளைத்துள்ள மரங்களை அகற்ற வேண்டும்.
விரிசல்களை சீரமைத்து, இடிந்த தடுப்பு சுவர்களை புதுப்பிக்க வேண்டும். பாலத்தில் முளைத்த மரங்களை அகற்றி, பாலத்தின் உறுதி தன்மையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.