3 இடங்களில் மரங்கள் விழுந்தன
பந்தலூரில் பலத்த மழை பெய்தது. இதனால் 3 இடங்களில் மரங்கள் விழுந்தன.
பந்தலூர்
பந்தலூரில் பலத்த மழை பெய்தது. இதனால் 3 இடங்களில் மரங்கள் விழுந்தன.
பலத்த மழை
நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதலே பந்தலூர் பகுதியில் வெயில் அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழையாக பெய்தது.
பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, பாட்டவயல், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், சேரம்பாடி, எருமாடு, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கால்வாய்களில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது.
மேற்கூரைகள் சேதம்
கொளப்பள்ளி குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலையொட்டி உள்ள மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த செவ்வந்தி என்பவர் சத்தம் கேட்டு உடனே வெளியே ஓடி வந்தார். இதில் வீட்டின் மேற்கூரைகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பெண் உயிர் தப்பினார். தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
இதேபோல் புஞ்சகொல்லியில் ஒரு வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. பலத்த மழையால் பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பிகள் மீது மரம் சாய்ந்ததால், மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
ஊட்டியில் நேற்று மதியம் 12 மணியளவில் மழை பெய்தது. 3 மணி நேரம் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள், வேலைக்கு சென்ற பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.