சாலையோரம் நிற்கும் பட்ட மரங்கள்
அருமனை அருகே சாலையோரம் நிற்கும் பட்ட மரங்கள் வெட்டி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
அருமனை,
அருமனை மற்றும் வெள்ளாங்கோடு, முழுக்கோடு ஆகிய பகுதிகளுக்கு குடிநீரானது வெள்ளாங்கோடு ஆற்றுப்படுகையில் உள்ள கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் திட்ட கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக அந்த பகுதியில் தனியாக மோட்டார் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் அருகில் உயர் மின்னழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது.
இந்த நிலையில் அந்த டிரான்ஸ்பார்மருக்கு அருகில் சாலையோரத்தில் நிற்கும் ஏராளமான மரங்கள் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்காக பலமுறை அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை பட்டுப்போன மரங்கள் வெட்டி அகற்றப்படவில்லை. காற்றின் வேகம் காரணமாக பட்ட மரங்கள் முறிந்து டிரான்ஸ்பார்மர் மீதோ அல்லது வாகன ஓட்டிகள் மீதோ விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரத்தில் பட்டுப்போன நிலையில் நிற்கும் மரங்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.