சுழன்று அடித்த சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்த மரங்கள்
புழுதி பறக்கும் சாலைகள்
'ஆடிக்காற்றில் அம்மி பறக்கும்' என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதன்படி ஆடி மாதம் பிறந்ததில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது.
திண்டுக்கல் நகரை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக சூறாவளிக்காற்று சுழன்று அடிக்கிறது. இதனால் மாநகர பகுதி புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதற்கு சாலையோரத்தில் பரவி கிடக்கும் மண்ணை, மாநகராட்சி நிர்வாகம் அகற்றாமல் இருப்பது தான் காரணம். காற்றில் பறக்கும் புழுதியால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோரின் விழிகளில் தூசுக்கள் அடைக்கலமாகி விபத்துக்கு வித்திடுகிறது. இதுஒருபுறம் இருக்க, மோட்டார் சைக்கிளில் செல்வோரின் சட்டையின் நிறமே மாறி விடும் அளவுக்கு புழுதி பறக்கிறது.
போக்குவரத்து பாதிப்பு
இதுமட்டுமின்றி சாலைகளில் கிடக்கிற பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. இதனால் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
இதேபோல் சில இடங்களில் மேற்கூரைகள் பறக்கின்றன. விளம்பர பேனர்கள் கழன்று விழுகின்றன. காற்றுக்கு தாக்குப்பிடிக்காத மரங்களும் ஆங்காங்கே வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
வழக்கம் போல் நேற்று பகலில் பலத்த காற்று வீசியது. இதனால் நகரின் முக்கிய சாலையோரங்களில் இருந்த மரங்கள் தள்ளாடின. இதில் ஆர்.எம். காலனியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு, சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
வேரோடு சாய்ந்த மரம்
இதேபோல் பெரும்பாறை அருகே வத்தலக்குண்டு-தாண்டிக்குடி மலைப்பாதையில் உள்ள தனியார் தோட்டத்தில் இருந்த இலவம் மரம் ஒன்று பலத்த காற்றுக்கு வேரோடு சாய்ந்தது.
மலைப்பாதையின் குறுக்கே மரம் விழுந்ததால் மூலக்கடை-இஞ்சோடை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனையடுத்து அங்கு வந்த கிராம மக்கள், அறுவை எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது. மேலும் அந்த வழியாக சென்ற மின்கம்பியும் அறுந்தது. இதனால் புல்லாவெளி, மீனாட்சி ஊத்து ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
யானை பொம்மை சேதம்
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நேற்று பலத்த காற்று வீசியது. இடையக்கோட்டை அருகே கள்ளிமந்தையம் செல்லும் சாலையோரத்தில் தனியார் ரியல் எஸ்டேட் சார்பில், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்ட யானை பொம்மை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அந்த வழியாக செல்வோர் அந்த பொம்மையை ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்து சென்றனர். மேலும் சிலர் தும்பிக்கை, தந்தங்களின் அருகே நின்று மகிழ்ச்சியோடு செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்தநிலையில் சுழன்று அடித்த சூறைக்காற்றுக்கு யானை பொம்மையின் தும்பிக்கை, தந்தங்கள் சேதம் அடைந்தன.
கடந்த சில தினங்களாக வீசிக்கொண்டிருக்கும் பலத்த காற்றினால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.