மரங்கள் தீயில் எரிந்து நாசம்
மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே குந்தாணிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராமன் (45). விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் விவசாயம் செய்யாமல் இருந்ததால் பல்வேறு வகையான மரங்கள் மற்றும் செடி, கொடிகள் முளைத்திருந்தது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக அங்கு இருந்த செடி, கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை இந்த செடி கொடிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் முடியவில்லை. இதுகுறித்து மோகன் ராமன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அங்கு இருந்த பல்வேறு வகையான மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.