300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுக்கல் கண்டுபிடிப்பு
குடிமேனஅள்ளியில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குடிமேனஅள்ளியில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கள ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக நடுகற்கள் காணப்பட்டாலும், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அவை அதிகமாக உள்ளன. அதேபோல நடுகல் வழிபாடும் தற்போது வரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது. இதனிடையே கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாறு ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும், காவேரிப்பட்டணம் அகரம் அருகே உள்ள குடிமேனஅள்ளி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஒரு நடுகல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கள ஆய்வின்போது, குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, சதாநந்த கிருஷ்ணகுமார், பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், கோவில் தர்மகர்த்தா பொன்னுசாமி, மற்றும் கோவில் பூசாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
இது பற்றி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
நடுக்கல்
அங்குள்ள வீரக்கரர் கோவிலில் ஒரு நடுக்கல் வைத்து வழிபட்டு வருவது தெரிய வந்தது. இந்த 2 நடுகற்களில் ஒரு நடுகல் குடிமேனஅள்ளி பகுதியைச் சேர்ந்த ஒரு ஊர் தலைவனுடையது என்பது தெரிய வந்தது. இவை 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இங்கு நடைபெற்ற பூசலில் ஊரைக்காக்க இவர் கொல்லப்பட்டதால் இவருக்கு நடுதல் எடுக்கப்பட்டுள்ளது. அவர் தலைவன் என்பதை குறிக்கும் வகையில், அவர் குதிரை மீது அமர்ந்திருக்கிறார். அவர் கையில் 2 வாள்கள் உள்ளன. அவர் இறந்தபோது அவருடன் உடன்கட்டை ஏறிய அவருடைய 2 மனைவிகளும் அந்த நடுகலில் காட்டப்பட்டுள்ளனர். அந்த குதிரையை வழிநடத்தி செல்லும் சேவகனும் காட்டப்பட்டுள்ளான்.
அதேபோல அவர் தலைவன் என்பதை குறிக்கும் வகையில், ஒருவர் அதற்குரிய கண்ணாடி சின்னத்தை எடுத்து வருகிறார். இந்த நடுகல்லானது கோவிலின் கருவறையில் வைத்து வணங்கப்படுகிறது. இந்த நடுகல்லில் உள்ள சிற்ப அமைப்பு அப்படியே கோவிலின் மேற்பகுதியிலும் சிமெண்ட்டால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் விழாக்களின் போது 5 பானைகள் எடுத்து வரப்படுகின்றன. அவை குடிமேனஅள்ளி, நாகரசம்பட்டி, மல்லிக்கல், கொண்டரம்பட்டி, கொங்கரப்பட்டியைச் சேர்ந்தவையாகும்.
கோவில் விழா
கரகம் நாகரசம்பட்டியில் இருந்தும், பூசைக்கூடை குடிமேனஅள்ளியில் இருந்தும், மற்றொரு கரகம் ஆற்றங்கரையோரம் பாக்காத்தியம்மா கோவிலில் இருந்தும் எடுத்து வரப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் விழா சிறப்பாக கொண்டாடப்படுவதாக தர்மகர்த்தா பொன்னுசாமி தெரிவித்தார். இந்த ஊரில் பெருமாள் என்பவரது நிலத்திலும், 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட 3 வீரர்களுடைய நடுகற்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.