நரிக்குறவர் இன மக்கள் 100 பேருக்கு பழங்குடியினர் சாதி சான்று
மயிலாடுதுறையில் நரிக்குறவர் இன மக்கள் 100 பேருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறையில் நரிக்குறவர் இன மக்கள் 100 பேருக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.
பழங்குடியின சாதி சான்று
மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் வருவாய் துறையின் சார்பில் நரிக்குறவர் இன மக்கள் 100 பேருக்கு பழங்குடியினர் சாதி சான்றுகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்று வழங்கப்படுகின்றது.
இதன்மூலம், அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும். எதிர்காலத்தில் உங்களுடைய குழந்தைகளை சிறந்த வல்லமை படைத்த தொழில் அதிபராக வருவதற்கும், அறிவாற்றல் உள்ளவராக திகழ்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும். நரிக்குறவர் இன மக்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்றார்.
பல நாள் கனவு நிறைவேறியது
இந்நிகழ்ச்சியில், பழங்குடியினர் இன சாதி சான்றிதழ் பெற்று நன்றி தெரிவித்து பேசிய ரம்பா என்பவர் கூறுகையில், நரிக்குறவர் சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சேர்க்க எங்களது தாத்தா காலத்திலிருந்து போராடி வந்தனர். தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் எங்கள் நரிக்குறவர் இன மக்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தற்போது மாவட்ட கலெக்டரால் இந்த பழங்குடியினர் சாதி சான்றிதழ் எங்களுக்கு கிடைத்துள்ளது.
எங்களுடைய பலநாள் கனவு நிறைவேறி உள்ளது. எங்கள் நரிக்குறவர் இன சமுதாய மக்கள் இதுவரை அரசு வேலைக்கு செல்லவில்லை. காரணம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி பட்டியலில் இருந்ததினால் எங்களுக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. தற்போது பழங்குடியினர் பட்டியலில் எங்களை சேர்த்ததினால் முன்னுரிமை அடிப்படையில் நாங்களும் அரசு வேலைக்கு செல்வோம் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் யுரேகா, தாசில்தார் மகேந்திரன், ஊராட்சி தலைவர் சேட்டு மற்றும் நரிக்குறவர் இன மக்கள் கலந்துகொண்டனர்.