300 மாணவ-மாணவிகளுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை
300 மாணவ-மாணவிகளுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும் என மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
300 மாணவ-மாணவிகளுக்கு சாதிச்சான்று வழங்க வேண்டும் என மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறை தீர்வு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அம்பேத்கர் நகர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக அதிகாரிகள் எங்களை வீட்டை காலி செய்ய வேண்டும் என்று வாய்வழி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், எங்கள் பகுதியில் உள்ள 2 வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து விட்டனர். தொடர்ந்து எங்களை காலி செய்யக்கோரி வற்புறுத்தி வருகின்றனர்.
இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். நாங்கள் தங்குவதற்கு மாற்று இடம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாதிச்சான்று
தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தண்டராம்பட்டு அருகே உள்ள மலையனூர் செக்கடி, மேல்பாச்சார், கீழ்பாச்சார் ஆகிய பகுதிகளில் ஏராளமான மலை குறவன் என்ற பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் சுமார் 300 மாணவ-மாணவிகள் உயர்கல்வி படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இதே சமூகத்தை சேர்ந்த 96 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து யாருக்கும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கீழ்பாச்சார் பகுதியில் பொதுமக்களுக்கு மயான வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உண்டு உறைவிட பள்ளி அமைக்க வேண்டும். அங்கு மாணவர்களின் நலனுக்காக விளையாட்டு மைதானமும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தாலுகா நொச்சிமலை கிராமத்தை சேர்ந்த 9 குடும்பத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வசித்து வருகிறோம். எங்கள் வீட்டின் அருகே ஏரி கால்வாய் உள்ளது. இந்த நிலையில் எங்களது வீட்டை அகற்றக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். நாங்கள் குடியிருக்கும் பகுதி நீர்பிடிப்பு பகுதியோ அல்லது நீர்வழிப் பாதையோ கிடையாது.
வீட்டை அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்கவும் ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.