சிதிலமடைந்த வீடுகளில் வசிக்கும் பழங்குடி இனமக்கள்


மீன்சுருட்டி அருகே சிதிலமடைந்த வீடுகளில் பழங்குடி இனமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வசிப்பதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

அரியலூர்

பழங்குடியின மக்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் மீன்சுருட்டி அருகே வங்குடி ஊராட்சிக்குட்பட்ட நரசிங்கம்பாளையம் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட இருளர் இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 22 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

தற்போது இந்த வீடுகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் ஆங்காங்கே நீட்டிக்கொண்டும், எலும்பு கூடுகளாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் வீடுகள் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொகுப்பு வீடுகள்

மழைக்காலங்களில் வீடுகளில் தங்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் இருளர் இன மக்கள் தங்களது வீட்டின் மேற்கூரையில் தார்பாயை விரித்து வைத்து உள்ளனர். இங்கு வசிக்கும் இருளர் இன மக்கள் தினக்கூலிகளாகவும், மரம் வெட்டும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் வீடுகளை பராமரிக்க முடியாமல் அதே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

எனவே சிதிலமடைந்த வீடுகளை இடித்து அகற்றிவிட்டு புதிய தொகுப்பு வீடுகளை கட்டித்தருமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சிமெண்டு காரைகள் பெயர்ந்தது

தனம்:- கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. தற்போது இந்த வீடுகள் மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக வீட்டின் மேற்கூரை இடிந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மழைக்காலத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மீது விழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழந்தைகளுடன் மிகவும் சிரமத்துடன் வசித்து வருகிறோம்.

பட்ட வழங்க கோரிக்கை

சத்யா:- பழுதடைந்த வீடுகளில் 40-க்கும் மேற்பட்டோர் மிகவும் சிரமத்துடன் வசித்து வருகிறோம். இந்த வீடுகளை இடித்து விட்டு புதிய தொகுப்பு வீடுகளை கட்டித்தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் காலங்களில் இங்கு வரும் அரசியல் கட்சியினர் எங்களுக்கு புதிய வீடுகளை கட்டி தருவதாக உறுதி அளிக்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. மழைக்காலங்களில் சிதிலமடைந்த வீடுகளில் குழந்தைகளுடன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழக்கூடிய நிலை உள்ளது. மேலும் எங்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு எங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுப்பதுடன், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story