பழங்குடியின மாணவர்கள் வெற்றி பெற வேண்டும்
போட்டி தேர்வுகளில் பழங்குடியின மாணவர்கள் வெற்றி பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் பேசினார்.
கூடலூர்,
போட்டி தேர்வுகளில் பழங்குடியின மாணவர்கள் வெற்றி பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் அம்ரித் பேசினார்.
போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி
பழங்குடியினர் நலத்துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் போட்டி தேர்வுகளுக்கான கையேடுகளை மாணவர்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அழிவின் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராவதற்கும், அதை எதிர்கொள்வதற்கும், பழைய வினாத்தாள்கள், பல்வேறு போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள், தினந்தோறும் செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் அவசியம்.
தயார்படுத்த வேண்டும்
மாணவர்கள் பயிற்சி வகுப்பில் நடைபெறும் தேர்வுகளில் தவறாமல் கலந்துகொண்டு, தங்களை தயார்படுத்தி கொள்வது அவசியமானது. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளில் கலந்துகொள்ளும் பழங்குடியின மாணவர்களுக்கு, நலத்துறை மூலம் போக்குவரத்து, மதிய உணவு வசதி, மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.
இதனை பழங்குடியின மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி எதிர்வரும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், பழங்குடியினர் நலத்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.