வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை
தூத்துக்குடியில் நேற்று தீ தொண்டு தினத்தையொட்டி, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் நேற்று தீ தொண்டு தினத்தையொட்டி, வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தீ தொண்டு தினம்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ விபத்தின் போதும் மீட்பு பணியின் போதும் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீ தொண்டு நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய வளாகத்தில் தீ தொண்டு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியின் போது உயிரிழந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் நினைவாக அங்குள்ள நினைவு ஸ்தூபிக்கு மாவட்ட அலுவலர் குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, மாவட்ட உதவி அலுவலர் ராஜூ, தூத்துக்குடி நிலைய அலுவலர் சகாயராஜ், தூத்துக்குடி நிலைய அலுவலர் (போக்குவரத்து) அருணாசலம் மற்றும் நிலைய பணியாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
பின்னர் தீ தொண்டு தினம் குறித்து மாவட்ட அலுவலர் குமார் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் ஒவ்வொரு தலைப்பின் அடிப்படையில் தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும் என்ற தலைப்பில் இன்று (அதாவது நேற்று) முதல் வரும் 20-ந் தேதி வரை அனுசரிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு பொது மக்கள் கூடுமிடம், தொழிற்சாலைகள், குடிசை பகுதிகளுக்கு சென்று தீ தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதில் தீ தடுப்பு குறித்து சொற்பொழிவு ஆற்றுதல், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல், மாதிரி பயிற்சி நடத்துதல், பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு மேற்கண்ட தலைப்பில் கவிதை, கட்டுரை ஓவிய போட்டிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தீ விபத்தினை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ தொண்டு நாள் விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருச்செந்தூர் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிலைய அலுவலர் போக்குவரத்து ரா.மோகன், சிறப்பு நிலைய அலுவலர் மோகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.