திருச்சி வங்கி அதிகாரி குத்திக்கொலை
புதுக்கோட்டை அருகே கோவில் விழாவில் நடனமாடிய இளைஞர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதன் எதிரொலியாக திருச்சியை சேர்ந்த வங்கி அதிகாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் திரண்ட சிலர் ஜன்னல் கண்ணாடியை கல்வீசி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்வீச்சு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் மேடையில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடனம் ஆடி உள்ளனர். அப்போது அவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்கி உள்ளனர்.
இதில் ஒடுகம்பட்டியை சேர்ந்த நூர் முகமது மகன் முகமது யாசிம் (வயது 21) என்பவர் நெற்றியில் கல் பட்டு ரத்தம் கொட்டியதில் காயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மோட்டார் சைக்கிளில் சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவருடன் ஒடுகம்பட்டியை சேர்ந்தவரும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருபவருமான ராஜ்குமார் மகன் விக்னேஸ்வரன் (29), வீரமணி என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர்.
வங்கி அதிகாரி சாவு
கூத்தாடிப்பாறை என்ற இடத்தில் வந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை வழிமறித்து அரிவாள், இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்டவற்றால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் விக்னேஸ்வரனின் கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் கூர் வாளால் ஒருவர் குத்தியுள்ளார்.
வீரமணிக்கு கை உடைந்து படுகாயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விக்னேஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். மோட்டார் சைக்கிளில் சென்ற முகமது யாசிம் உள்ளிட்டவர்கள் முன்னதாக மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.
கண்ணாடி உடைப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதில் சிலர் கல் வீசியதில் மருத்துவமனையில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அங்கு வந்த கீரனூர் போலீசார் கிராமமக்களை கலைந்து போக செய்து, விக்னேஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் ஓ.பள்ளத்துப்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரை கைது செய்தனர். மேலும் சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முற்றுகை
இந்நிலையில் ஒடுகம்பட்டி. ஓ.பள்ளத்துப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கீரனூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கொலையாளிகளை கைது செய்யும் வரை விக்னேஸ்வரன் உடலை வாங்க மாட்டோம் என கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக கூறினர். இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் விக்னேஸ்வரன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் உள்ளது. வங்கி அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே ஒடுகம்பட்டி மற்றும் ஓ.பள்ளத்துப்பட்டியில் கிராம மக்களிடையே மோதல் இருந்து வந்தநிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.