திருச்சி மாநாடு எழுச்சி மாநாடாக அமைந்தது: மாநிலம் முழுவதும் மண்டல மாநாடு நடத்தப்படும் -ஓ.பன்னீர்செல்வம்


திருச்சி மாநாடு எழுச்சி மாநாடாக அமைந்தது: மாநிலம் முழுவதும் மண்டல மாநாடு நடத்தப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
x

திருச்சி மாநாடு எழுச்சி மாநாடாக அமைந்தது என்றும், அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் மண்டல மாநாடு நடத்த இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை,

மே தினத்தை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லம் முன்பு 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகளை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., கு.ப.கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

எழுச்சி மாநாடு

மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தை ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் விழாவாக கொண்டாடுகிறோம். திருச்சியில் நடைபெற்ற மாநாடு எதிர்பார்த்த அளவிற்கு தொண்டர்களின் எழுச்சி மாநாடாக அமைந்து, தமிழகம் முழுவதும் அரசியல் மாற்றத்தை உருவாக்கி உள்ளது. அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வது குறித்தும், மண்டல வாரியாக மாநாடு நடத்துவது குறித்தும் இன்று (நேற்று) ஆலோசிக்க உள்ளோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து எந்த நிலையிலும், எந்த சூழலிலும் யாராலும் அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது, கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை

அதைத்தொடர்ந்து, அடையாறு பசுமைவழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்வது மற்றும் மண்டல வாரியாக மாநாடு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டார். மண்டல மாநாடுகள் எங்கெங்கு நடத்துவது? எந்தெந்த தேதிகளில் நடத்துவது என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு கலைப்பு

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். புதிய நிர்வாகிகளை நியமித்தும் அறிக்கை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை கலைப்பதாக நேற்று அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடிப்படை உறுப்பினர்களின் பரிந்துரையை ஏற்று கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் போலிப் பொதுக்குழு இன்று முதல் கலைக்கப்படுகிறது. கட்சி உறுப்பினர்கள் யாரும் அவர்களோடு தொடர்பு கொள்ளக்கூடாது. விரைவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்' என்று கூறியுள்ளார்.


Next Story