குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருச்சி

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

மாநகராட்சி கூட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டஅரங்கில் சாதாரண கூட்டம் நேற்று காலை நடந்தது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், முதல்-அமைச்சர் திருச்சிக்கு வருவதால், அவரை வழியனுப்ப அனைவரும் செல்ல வேண்டும். அதனால் கூட்டத்தை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தி.மு.க. கவுன்சிலர் முத்துச்செல்வம் வலியுறுத்தினார். இது தொடர்பாக மேயருக்கும், கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. பின்னர் மேயர் அன்பழகன் பேசுகையில், கவுன்சிலர்கள் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ள தீர்மான பொருள்களில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவற்றை ஒத்தி வைத்துவிடுவோம். மற்ற பொருட்களை நிறைவேற்றிவிட்டு செல்லலாம். மக்கள் பணி எந்தவிதத்திலும் தடைபடக்கூடாது என்றார். இதை கவுன்சிலர்கள் ஏற்று கொண்டு கூட்டம் நடந்தது.

காவிரி பாலம்

5-வது வார்டு கவுன்சிலர் அப்பீஸ்முத்துக்குமார் பேசுகையில், காவிரி பாலம் பராமரிப்பு பணி காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைகிறார்கள். ஆகவே காவிரி பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், அங்கு இருசக்கர வாகனங்களையாவது செல்ல அனுமதிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் மலட்டாறு வாய்க்காலில் ஆகாயத்தாமரை அதிகமாக இருக்கிறது அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றார்.

43-வது வார்டு கவுன்சிலர் செந்தில் பேசும்போது, தமிழகத்திலேயே முதன் முதலாக 38-வது வார்டில் உள்ள பள்ளியில் முதல்-அமைச்சரால் வானவில் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை செய்த அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி அனைவரும் அவரை வழியனுப்ப செல்ல வேண்டி இருப்பதால் அவசர, அவசரமாக கூட்டத்தை நடத்தக்கூடாது என்றார்.

வாகனங்கள் பற்றாக்குறை

28-வது வார்டு கவுன்சிலர் பைஸ்அகமது பேசும்போது, திருச்சி மாநகராட்சியில் வாகனங்கள் பற்றாக்குறை உள்ளது. போதிய வாகனங்கள் வாங்க வேண்டும்.சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றார்.

39-வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ் பேசும்போது, திருச்சி மாநகராட்சி 41-வது வார்டு கவுன்சிலரை திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமித்துள்ளார். அவருக்கும், அதற்கு பரிந்துரை செய்த திருநாவுக்கரசர் எம்.பி.க்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

பாதுகாப்பு உபகரணங்கள்

அனைத்து வார்டுகளுக்கும் சரிசமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தூய்மைப்பணியாளர்களுக்கு ரெயின்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கும் அபராத தொகையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள்.

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 45 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. அதில் 4 தீர்மானங்கள் ஒத்திவைக்கப்பட்டு, மீதமுள்ள 41 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


Next Story