திருச்சி மாவட்ட கலெக்டர் சுற்றறிக்கைக்கு தடை கோரி வழக்கு
புத்தகக்கண்காட்சி நடத்த தனியாரிடம் நன்கொடை வசூலிக்க வலியுறுத்திய திருச்சி மாவட்ட கலெக்டர் சுற்றறிக்கைக்கு தடை கோரி வழக்கு ெதாடரப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம் காரப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்வரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருச்சியில் புத்தகத்திருவிழா, வருகிற 16-ந்தேதி (அதாவது இன்று) தொடங்கி 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை திருச்சி மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது. திருச்சியில் இதுபோன்ற புத்தகக் கண்காட்சி மற்றும் எழுத்தறிவு விழா தொடர்ந்து 10 நாட்களுக்கு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இந்த விழாவை நடத்துவதற்கு, தமிழக அரசு ரூ.17.50 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. இந்த கண்காட்சியில், நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட புத்தக நிலையங்கள் தங்களின் ஸ்டால்களை அமைக்கின்றன.
இந்தநிலையில் இந்த புத்தக கண்காட்சிக்காக பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள், கல்வி நிறுவனங்கள், என்ஜினீயரிங் நிறுவனங்களிடம் நன்கொடைகள் வசூலிக்கும்படி பல்வேறு துறை அதிகாரிகளுக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் கடந்த 30-ந்தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது முற்றிலும் சட்டவிரோதமானது.
இதுபோல தனியாரிடம் நன்கொடைகள் வசூலிக்க கலெக்டருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. புத்தகக்கண்காட்சியில் கடைகள் நடத்தும் புத்தக நிலையங்களின் மூலம் போதுமான வருவாய் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைக்கும். அது தவிர, தமிழக அரசும் ரூ.18 லட்சம் வரை வழங்கியுள்ளது.
எனவே புத்தக கண்காட்சிக்கு தனியாரிடம் நன்கொடை வசூலிக்க அனுமதித்து கலெக்டர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது என்றார்.
இதையடுத்து, இதுபோல அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றுகூறி, வழக்கை முடித்து வைத்தார்.
==========