திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
அரசு ஊழியர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
கணக்காளர்
திருச்சி பீமநகர் முறுக்குகார தெருவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 38). இவர் கல்வித்துறையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது உறவினர் சந்தோஷ் சிவனுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதுகுறித்து கேட்டபோது கதிரவனுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கதிரவன் மற்றும் சந்தோஷ் சிவனை கத்தியால் குத்தி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கதிரவன் கொடு்த்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பீமநகரை சோ்ந்த ஜெயபாண்டியன் (29), ஹரி (24) ஆகியோரை கைது செய்தனர். மேலும் வீரபாண்டி, கூனிபஜாரை சோ்ந்த வீரமுத்துபாண்டி (29) ஆகியோரை தேடி வருகின்றனர்.
பெண் தற்கொலை
*திருச்சி பாலக்கரை கூனிபஜார் பகுதியை சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மனைவி யாஸ்மின் (34). கணவர் குவைத் நாட்டில் வேலை செய்து வருவதால் யாஸ்மின் தனியாக வசித்து வந்தார். நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண் கடத்திய 2 பேர் கைது
*தொட்டியம் போலீசார் கிழிஞ்சிநத்தம், கொளக்குடி சாலையில் ரோந்து பணியில்ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்ததில் ஏரி மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் டிராக்டர்களை பறிமுதல் செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த கொளக்குடியை சேர்ந்த கர்ணன் (29), இளங்கோவன் (45) ஆகியோரை கைது செய்தனர்.
கொலை மிரட்டல்
*திருச்சி சிந்தாமணி கரூர் ரோடு பாலகிருஷ்ணன் நகரை சேர்ந்த மனோகரன் மகன் சங்கர் (37). ஆக்டிங் கார் டிரைவர். இவருக்கும் இவரது தம்பி பிரபு என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சங்கர் அவரது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, பிரபு சங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.