திருச்சி மாவட்ட செய்தி சிதறல்


திருச்சி மாவட்ட செய்தி சிதறல்
x

கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் ரூ.5 ஆயிரம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூலி வேலை

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் குமார் (வயது 53). இவர் அரியமங்கலத்தில் உள்ள கோழி கறிக் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு 10 மணி அளவில் எஸ்.ஐ.டி அருகே நடந்து வந்தார்.

அப்போது அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த வெற்றி என்கிற வெற்றி வேல் (21), சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (21) ஆகியோர் குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துள்ளனர். அப்போது அங்கு வந்த பொது மக்களையும் மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

செல்போன் திருட்டு

*திருவானைக்காவல் கன்னிமார்தோப்பு பகுதியை சோ்ந்தவர் ஸ்ரீவித்யா (29). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு மாட்டு கொட்டகைக்கு சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 2 செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த முத்து என்கிற மொழியன் (40) என்பவரை கைது செய்தனர்.

தாக்குதல்

*திருச்சியை அடுத்த மருதாண்டகுறிச்சி அருகே சந்தோஷ் நகரை சேர்ந்தவர் மதன் ஜோஸ்வா (40). இவருக்கும், உறையூர் அருகே பாண்டமங்கலத்தை சேர்ந்த அப்துல் இம்ரான் (19), ஷேக் அகமது (19) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஆட்டோவில் வந்த 2 பேரும் மதன் ஜோஸ்வாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் பிணம்

*முசிறியை அடுத்த ஏவூர் கருப்பு கோவில் மண்மேட்டில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ஏவூர் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5¾ பவுன் நகை திருட்டு

*திருச்சி காஜாபேட்டையை சேர்ந்தவர் முருகனின் மனைவி அமராவதி (50). இவர் சம்பவத்தன்று பாலக்கரையில் இருந்து சத்திரம் பஸ்நிலையத்துக்கு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது, இவர் கழுத்தில் அணிந்திருந்த 5¾ பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரிவாள் வெட்டு

*தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா (45). கறிக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வரும் இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ராஜா (44) கடன் கேட்டுள்ளார்.அதற்கு முத்தையா நான் ஏற்கனவே கொடுத்த பணத்தை நீ இன்னும் திருப்பி தரவில்லை .மேலும் கடன் கேட்டால் எப்படி?. என்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா அங்கிருந்த அரிவாளை எடுத்து முத்தையாவை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.


Next Story