கொள்ளை வழக்கில் தப்பியோடிய குற்றவாளி திருச்சி சிறையில் அடைப்பு
கொள்ளை வழக்கில் தப்பியோடிய குற்றவாளி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தில் எலக்ட்ரீசியன் பாண்டியன் வீட்டில் கடந்த மே மாதம் 8-ந்தேதி நகை மற்றும் காரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற வழக்கில் 9 பேரில், 5 பேரை கடந்த 15-ந்தேதி தனிப்படை போலீசார் கைது செய்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்ற போது, சென்னை பெருங்குடி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் பிரசாந்த் (வயது 26) என்பவர் பாதுகாப்பிற்கு வந்திருந்த போலீசாரை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடினார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய விஜயன் என்ற குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தப்பியோடிய பிரசாந்தை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின் பேரில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் வழிக்காட்டுதலின் பேரில், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் தலைமறைவாகி இருந்த பிரசாந்தை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்து பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து பிரசாந்தை நேற்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள பலராம், புஷ்பராஜ், முத்துபாண்டி ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.