திருச்சி: மர்மநபர்களால் வாலிபர் வெட்டிக்கொலை - போலீஸ் விசாரணை
மேலஅம்பிகாபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி, மேல அம்பிகாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவரது மகன் ரிஷி என்கிற ஆகாஷ் (23).இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நீண்ட நேரம் ஆகியும் ரிஷி வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் அவரை தேடியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை வாலிபர் ரிஷி மேலகல்கண்டார் கோட்டை சுடுகாடு பகுதியில் உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் ரிஷியின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். இது குறித்து பொன்மலை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். விசாரணையில் மர்ம நபர்கள் ரிஷியை சரமாரியாக பயங்கர ஆயுதங்களுடன் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. மேலும் போலீசார் இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலைக்கான காரணம் என்ன? யார் செய்தது? என்பது குறித்து பொன்மலை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொன் மலை பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.