டிரோன் மூலம் தபால் சேவை கொண்டு வர முயற்சி தமிழக முதன்மை அதிகாரி தகவல்


டிரோன் மூலம் தபால் சேவை கொண்டு வர முயற்சி தமிழக முதன்மை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டிரோன் மூலம் தபால் சேவை கொண்டு வர முயற்சி எடுக்கப்படுவதாக கடலூரில் தமிழக முதன்மை அதிகாரி கூறினார்.

கடலூர்

இந்திய தபால் துறை தமிழ்நாடு வட்டம் திருச்சி மண்டலம் சார்பில் கடலூர் தபால் கோட்டத்தில் சிறப்பு தபால்தலை கண்காட்சி டவுன்ஹாலில் நடந்தது. கண்காட்சியை தமிழ்நாடு வட்ட முதன்மை தபால் அதிகாரி சாருகேசி, என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி, திருச்சி மண்டல தபால் அதிகாரி நிர்மலா தேவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

கடலூர் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வரவேற்றார். இந்த கண்காட்சியில் பல்வேறு தபால்தலைகள் இடம்பெற்றிருந்தன. தொடர்ந்து தமிழ்நாடு வட்டத்தில் முதன் முறையாக சிறப்பு தபால்உறை மற்றும் கடலூரை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால்உறை டிரோன் மூலம் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற டவுன்ஹால் வரை கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து அந்த தபால் உறையை முதன்மை தபால் அதிகாரி சாருகேசி வெளியிட, அதை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பெற்றுக்கொண்டார். தபால் உறையின் மீது கடலூர் கோட்டத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் கடல் சிப்பிகள் பதிக்கப்பட்டிருந்தன.

செல்வமகள் சேமிப்பு

முன்னதாக மாணவி ரக்ஷிதா தபால் நிலையம் குறித்து வரைந்த ஓவியம் பற்றிய தபால்உறை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணத்துப்பூச்சி படங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டது.

தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, பாஸ் புத்தகம் வழங்கப்பட்டது.

தபால் சேகரிப்பாளர் சேஷாத்திரி, தபால் சேகரிப்பு குறித்து பேசினார். உதவி பேராசிரியர் சிவசக்திவேலன் கலந்து கொண்டு, நமது உணவு எவ்வளவு பாதுகாப்பானது என்ற தலைப்பில் பேசினார். இதில் மத்திய மண்டல உதவி இயக்குனர் கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, தபால்தலை கண்காட்சியை பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை தபால் அதிகாரி சாருகேசி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.200 கோடி

தபால் சேமிப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நிறைய கணக்குகளை தொடங்குதல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம். தற்போது இன்சூரன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் இன்சூரன்ஸ் பிரிமீயம் பெற்று சாதனை படைத்து உள்ளோம். தபால்உறை தயாரிப்பு மற்றும் உறைகள் வெளியிட்டுள்ளோம்.

டிரோன் சேவை

டிரோன் மூலம் சிறப்பு தபால்உறை வெளியிட்டுள்ளோம். முதன் முதலில் குஜராத்தில் இந்திய தபால் துறை மூலம் கொரோனா நேரத்தில் டிரோன் மூலம் மருந்து வினியோகம் செய்யப்பட்டது. இந்த டிரோனை தபால் நிலையங்களில் பயன்படுத்தலாம் என்று தெரிவிப்பதற்காக, இங்கு டிரோன் மூலம் தபால் உறை வெளியிடப்பட்டது. வருங்காலத்தில் டிரோன் மூலம் தபால் சேவை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். இருப்பினும் இது அரசின் கொள்கை முடிவு.

தனியார் கூரியர் நிறுவனங்கள் சேவையை விட எங்களது தபால் சேவை சிறப்பாக உள்ளது. சில தனியார் கூரியர் நிறுவனங்கள் கிராமங்களுக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் நாங்கள் கிராமங்களில் சிறப்பான சேவையை செய்து வருகிறோம். குறிப்பாக மலை, கடல் பகுதியில் இருந்தாலும் தபால் ஊழியர்கள் அவர்களின் சேவையை செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தபால் கண்காட்சி இன்றும்(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.


Next Story