இலங்கைக்கு தப்பிக்க முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரருக்கு2 ஆண்டு ஜெயில் தண்டனை


இலங்கைக்கு தப்பிக்க முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரருக்கு2 ஆண்டு ஜெயில் தண்டனை
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு தப்பிக்க முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரருக்கு2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடிகோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

கடத்தல்காரர்

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இவர் 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

மேலும் இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்றார். இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

சாட்களிடம் விசாரணை

தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு வி.சி.குபேரசுந்தர் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். அந்த குற்றப்பத்திரிகை நகல், ஜோனதன் தோர்னுக்கு வழங்கப்பட்டது.

அப்போது, ஜோனதன் தோர்ன் ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை நகல் வேண்டும் என்று கேட்டதால், ஆங்கிலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி ஜோனதன் தோர்னிடம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சாட்சிகள் விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் 35 சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆனால் முக்கிய சாட்சிகளாக 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 28-ந் தேதியுடன் சாட்சிகள் விசாரணை முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

2 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜோனதன் தோர்னுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு வி.சி.குபேரசுந்தர் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முருகபெருமாள் ஆஜர் ஆனார்.

மேலும், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜோனதன் தோர்ன் ஒரு உயர்ரக செல்போனை வைத்து இருந்தார். அந்த செல்போனில் உள்ள தகவல்களை பெறுவதற்காககவும், முக்கிய ஆவணங்களை சேகரிப்பதற்காகவும் கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அந்த செல்போனின் பாஸ்வேர்டை ஜோனதன் தோர்ன் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மர்மம் நீடிப்பு

இதனால் கோர்ட்டு உத்தரவு பெற்று, அந்த செல்போனில் உள்ள தகவல்களை பெறுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வகத்துக்கு போலீசார் செல்போனை அனுப்பி வைத்தனர். ஆனால் ஆய்வகத்திலும் அந்த செல்போனை திறக்க முடியவில்லை.

இதனால் ஜோனதன் தோர்ன் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட வந்தாரா, அவருக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா, ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பது தெரியாமல் மர்மம் நீடிக்கிறது.


Next Story