கடத்த முயன்ற800 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 800 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கொல்லங்கோடு,
நித்திரவிளை வழியாக கேரளாவுக்கு மானியவிலை மண்எண்ணெய் கடத்தி செல்லப்படுவதாக நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை விரிவிளை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக பதிவெண் கொண்ட கார் ஒன்று வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தில் சோதனை போட்டபோது அதில் தமிழக அரசால் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய மண்எண்ணெய் இருந்தது. 23 கேன்களில் தலா 35 லிட்டர் வீதம் சுமார் 800 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து தப்பி ஓடிய டிரைவர் குறித்தும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.