இலங்கைக்கு கடத்த முயன்றரூ.45 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45 லட்சம் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.45 லட்சம் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலோர பகுதிகளில் கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் பீடி இலை கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது கியூ பிரிவு போலீசாரும் ரோந்து சென்று, கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து சுங்கத்துறை வசம் ஒப்படைத்து வருகின்றனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
சமீபகாலமாக இலங்கையில் பீடி இலையின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பீடி இலையானது இலங்கையில் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பீடி இலை மூட்டைகள்
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே புல்லாவெளி பகுதியில் இருந்து பீடி இலைகளை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், ஏட்டு ராமர், இருதயராஜ், இசக்கி, பழனி, பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலையில் புல்லாவெளி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு மினி லாரியில் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. போலீசாரைக் கண்டதும் மினி லாரியில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டனர்.
ரூ.45 லட்சம் மதிப்பு
அந்த மினி லாரியில் இருந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர். மொத்தம் 40 மூட்டைகளில் சுமார் 1½ டன் பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது. இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும். பீடி இலை மூட்டைகளுடன் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பீடி இலைகளை மினி லாரியில் பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
----