மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்க முயற்சி
குமராட்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
காட்டுமன்னார்கோவில்,
சங்கிலி பறிக்க முயற்சி
சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் வாசு மனைவி ஜெயந்தி(வயது 42). இவர் நேற்று காலை தனது சொந்த ஊரான குமராட்சி அருகே உள்ள மா.அரசூர் கிராமத்திற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். குமராட்சி அடுத்த மேலபருத்திக்குடி ஷட்டர் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் ஜெயந்தியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட ஜெயந்தி, தாலி சங்கிலியை தனது கையால் கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்தவுடன் அவர்கள் சங்கிலி பறிக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
ஆற்றில் குதித்து தப்ப முயற்சி
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த குமராட்சி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மற்றும் போலீசார் துரத்தி வருவதை அறிந்த மர்ம நபர்கள் கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள குருவாடி கிராமத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆற்றில் குதித்து தப்பி செல்ல முயன்றனர்.
இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் போலீசார் எதிர்கரையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆற்றின் கரையோரம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் காத்து நின்றனர்.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து ஆற்றில் குதித்தவர்கள் மறுகரையில் வெளியேற முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து சீர்காழி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சேத்தியாத்தோப்பு துணைபோலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார், குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சீர்காழி விரைந்து சென்று அவர்களை குமராட்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சீர்காழி தாலுகா வானகிரியை சேர்ந்த ஜவகர்(22), நாகை மாவட்டம் கீழையூரை சேர்ந்த கண்ணன்(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.