காய்கறி கடையில் திருடிய தள்ளுவண்டி கடைக்காரர் கைது
வத்தலக்குண்டுவில் காய்கறி கடையில் திருடிய தள்ளுவண்டி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வத்தலக்குண்டு-மதுரை சாலையில் சி.எஸ்.ஐ. தேவாலயம் எதிர்புறம் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை தார்பாய் கொண்டு மூடி வைத்துவிட்டு செந்தில்குமார் வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் அவர் வழக்கம்போல் வந்து கடையை திறந்து உள்ளே சென்றார். அங்கு கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.500 மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான காய்கறிகள் திருடு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் செந்தில்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கடைக்கு வந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியில் தள்ளுவண்டியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வரும் கிருஷ்ணகுமார் (38) என்பவர் உள்ளே புகுந்து காய்கறிகள், பணம் ஆகியவற்றை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.