கொசுக்களை ஒழிக்க டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் புதியதொழில் நுட்பம்


கொசுக்களை ஒழிக்க டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் புதியதொழில் நுட்பம்
x
திருப்பூர்


உடுமலை நகராட்சியில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் நவீன தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொசு உற்பத்தி

உடுமலை நகராட்சியில் தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளிட்ட மழைநீர் ஓடைகள் முழுவதுமாக சாக்கடைக் கால்வாய்களாக மாறிவிட்டன. இவையே நகரின் கொசு உற்பத்தியில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. சாக்கடைக் கால்வாய்களில் தேங்கும் நீரில் தினசரி அதிக அளவில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் பரவுகின்றன.

இதனைத்தடுக்க நகராட்சிப் பணியாளர்கள் கைகளால் இயக்கும் எந்திரங்கள் மூலம் மருந்து தெளித்து வருகின்றனர். இதுதவிர வாகனங்கள் மூலம் கொசுப்புகை மருந்து தெளித்தல், வீடு வீடாக சென்று தண்ணீர்தொட்டிகளில் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கொசு ஒழிப்புப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கென 58 பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நோய்த்தொற்று

அதேநேரத்தில் கொசு உற்பத்தியின் முக்கிய கேந்திரமாக விளங்கி வரும் தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிப்பது சாத்தியமில்லாத விஷயமாகவே இருந்து வந்தது.இதனால் இந்த பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் கொசுத் தொல்லையால் அவதிப்படுவதுடன் பலவேறு நோய்த் தொற்றுகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் டிரோன்கள் மூலம் தங்கம்மாள் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.

இந்த பணிகளை நகர்மன்ற தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இனிவரும் காலங்களில் நகராட்சிப் பணியாளர்கள் செல்ல முடியாத இடங்களில் டிரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story